
புதுடில்லி: கடந்த மாதத்துடன் முடிந்த சந்தையாண்டான 2009 -10ல், அரிசி கொள்முதல் 7 சதவீதம் குறைந்து, மொத்தம் மூன்று கோடியே 14 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சந்தையாண்டான (அக்டோபர் - செப்டம்பர்) 2008 - 09ல் இந்திய உணவுக் கழகம் மூன்று கோடியே 36 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்தது. விளைச்சல் ஆண்டான (ஜூலை-ஜூன்) 2009 -10ல் அரிசி உற்பத்தி எட்டு கோடியே 91 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக குறைந்து விட்டது. அதற்கு முந்தைய விளைச்சல் ஆண்டில் அரிசி உற்பத்தி, ஒன்பது கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் டன்னாக இருந்தது. கடந்த 2009ல் வடமாநிலங்களில் பஞ்சம் ஏற்பட்டதால் அரிசி உற்பத்தியும் கொள்முதலும் குறைந்தது. மத்திய கொள்முதலில் 30 சதவீதம் பஞ்சாப் தருகிறது. அதற்கடுத்த நிலையில் ஆந்திரா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.